Tuesday, November 12, 2013

கீழக்கரையில் களை கட்டும் விற்பனையில் தித்திக்கும் 'அச்சார் ஊறுகாய்' - சகோதரர் சர்புதீன் அவர்களின் ஸ்பெசல் தயாரிப்பு !

கீழக்கரை சேரான் தெருவை சேர்ந்த சர்புதீன் அவர்கள் பழைய மீன் மார்க்கெட் அருகே 'சர்புதீன் ஸ்டோர்' என்கிற பெயரில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கடை நடத்தி வருகிறார். கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டுகளாய், இங்கு தித்திக்கும் சுவையுடன், கமகமக்கும் அச்சார் ஊருகாய் வியாபாரம் செய்து வருகிறார். மாலை 6 மணி ஆகி விட்டாலே சூடு பிடிக்க ஆரம்பிக்கும் வியாபாரம் இரவு 9 மணி வரை தொடர்கிறது. பல்வேறு தெருக்களில் இருந்தும் தங்கள் நண்பர்களுடன் இளைஞர்கள் பட்டாளம், இந்த கடையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். 



இது குறித்து 'அச்சார் புகழ்' சகோதரர் சர்புதீன் அவர்கள் கூறும் போது "அல்ஹம்துலில்லாஹ். வியாபாரம் சிறப்பாக உள்ளது. ஒரு நாளைக்கு சீனி அவரைக்காய், உருளைக்கிளங்கு, கத்தரிக்காய், கேரட், முருங்கக்காய் உள்ளிட்ட 15 கிலோ காய்கறிகளை கொண்டு சமைக்கப்படும் அச்சார் ஊறுகாய்,  சுடச் சுட வாடிக்கையாளர்களுக்கு  பரிமாறுகிறோம். ஏர்வாடி, வாலிநோக்கம் போன்ற வெளி ஊர்களில் இருந்தும் கூட எங்கள் அச்சார் ஊறுகாயை ருசி பார்க்க தினமும் வருகின்றனர். ஒரு கப் 5 ரூபாய்க்கு விற்பனை செய்து  வருகிறோம். உள்ளூரில் தொழில் செய்து குடும்பத்தாருடன் வசிப்பது சந்தோசமாக இருக்கிறது" என்று மகிழ்ச்சியுடன்  தெரிவித்தார்.


இது குறித்து துபாயில் இருந்து ஊருக்கு விடுமுறையில் வந்திருக்கும் பழைய குத்பா பள்ளி தெருவை சேர்ந்த இந்த கடையின் புதிய வாடிக்கையாளர். பரக்கத் அலி அவர்கள் கூறும் போது "இங்கு கடை இருப்பதே எனக்கு தெரியாது.

ஏதோ அதிகமாக கூட்டம் முண்டியடிப்பதை கண்டு, சென்று  பார்த்தேன். அபோது தான் தெரிந்தது அச்சாரின் மகிமை.வாங்கி சுவைக்கும் போது அருமையான சுவையில் தித்திப்பாய் இருந்தது. 

சிறு வயதில் வெள்ளிக் கிழமைகளில் ஜும்மா பள்ளி வாசலில், நண்பர்களோடு விளையாடிக் கொண்டு வாங்கி தின்ற நியாபகம் வந்து விட்டது. நம் ஊரில் பொரித்த வகையறாக்களின் கடைகள் தான் அதிகம் காணப்படுகிறது. அதிகமாக அவற்றை சாப்பிடுவதை தவிர்த்து விட்டு, இது போன்ற சத்துள்ள காய்கறிகள் நிறைந்த அச்சாரை சாப்பிட்டு பார்க்க வேண்டும்" என்று அச்சாரை சுவைத்தவாறே, நம்மையும் ருசி பார்க்க தூண்டும் விதமாக பேசினார்.

சகோதரர் சர்புதீன் அவர்களின் அச்சார் வியாபாரம் மென் மேலும் சிறக்க கீழை இளையவன் வலை தளம் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.